Wednesday, May 9, 2012

மறைக்கப்பட்ட ஈழத்தந்தை "செல்வா"வின் புகழ்..எச்சரிக்கை - பதிவின் நீளத்தை பார்த்துவிட்டு வாசிக்க தொடங்குங்கள்!

மலேசிய நாட்டில் பிறந்தவர்,"ஈழத்தந்தை"என்று அழைக்கப்படும் தகுதியை பெற்றார் என்றால் அதில் உள்ளடங்கியிருக்கும் செய்திகள் ஓராயிரமாக இருக்குமென்பதில் எந்த ஐயப்பாடுமில்லை என்பதே உண்மை.சொன்னால் என்ன தந்தை செல்வாவை பொறுத்தவரை அது உண்மையிலும் உண்மை என்றே சொல்லவேண்டும்.

                                                                 
                                                                 ஈழத்தந்தை "செல்வா"                


மலேசிய நாட்டில் 'ஈப்போ' என்னும் பகுதியில் பிறந்த "சாமுவேல் ஜெம்ஸ் வேலுப்பிள்ளை செல்வநாயகம்"என்ற பெயருடையவரே பின்னாளில் 'தந்தை செல்வா' என்று எல்லோராலும் அறியப்பட்டவராவர்.இவரது தாய் நாடு இலங்கையாகும்.1898,March,31 பிறந்து,வளந்தது எல்லாம் மலேசியாவில் உள்ள ஈப்போ மாநிலத்தில்தான்.இவரது தந்தை அங்கு வணிகத்துறையில் இருந்தார்,இவரது சிறு வயதில் தந்தையின் இழப்பிற்கு பின் இவர் தனது தாய் நாடான இலங்கையை வந்தடைந்தார்.இவர் யாழ்ப்பான தூய யோவான் கல்லூரியில் பயின்றார்.பின் இவர் இளங்கலை அறிவியல்(B.Sc.)பட்டம் பெற்று தனது சமூகத்திற்கான முதல்  சேவையாக ஆசிரியர் பணியினை தாமஸ் கல்லூரி,வெஸ்லி கல்லூரி என்பவற்றில் தொடங்கினார்.சமுக அக்கறை காரணமாக தனது வாழ்க்கை தடத்தினை மாற்றிய தந்தை செல்வா சட்டக்கல்வி பயின்று சிறப்பான வழக்கறிஞராக உருவானார்.இவர் நீதிமன்றம் சென்று வழக்காடி வருவாய் ஈட்டிக் கொள்ளவிரும்பவில்லை சமுதாய வழக்கறிஞராகவே தன்னை இனம் காட்டிக்கொள்ள விரும்பினார் குறிப்பாக நம்மவர்(ஈழத்தமிழர்)களுக்கான வழக்கறிஞராக மாறினார் என்றே குறிப்பிட வேண்டும். 

 "சுயநலமற்ற தலைவனை காலமே தானாக உருவாக்கிவிடும்" என்ற இயல்பிற்கு ஏற்ப உருவான சுதந்திர தலைவர்தான் செல்வா அவர்கள்.தனது 40 ஆம் வயது வரை அரசியல் பக்கமே வராத அவரை தனது 50 ஆம் வயதில் அரசியலுக்குள் இழுக்கும் வகையிலான நிகழ்வுகள் இலங்கையில் நிகழ்ந்தன.ஆரம்ப காலத்தில் சிங்களத்தின் வல்லாண்மையை எதிர்ப்பதில் தன் பணியை தொடங்கினார்.தமிழினத்தின் மீது அவர்கள் செலுத்திய ஆதிக்கத்தையும்,அத்துமீறல்களையும்,பேரினப் போக்கையும்,இரண்டாந்தர மக்களாகத் தமிழர்களுக்கு அவர்கள் அரங்கேற்றிய கொடுமைகளையும் தந்தை செல்வா எதிர்த்ததோடு நிற்காமல் தமிழர்களிடையே அவை பற்றிய விழிப்புணர்வையும் ஏற்படுத்தினார்.

அரசு வேலை கிடைத்தாலே அனைத்தும் கிடைத்தது போன்ற ஒரு மயக்க நிலையில் அந்தக்கால தமிழர்களிடம் இருந்தது.'ஆடு மேய்த்தாலும் அரசாங்கத்தில் மேய்க்க வேண்டும்'என்று எண்ணும் அளவிற்கு அவர்களுக்கு அரசுப் பணியில் ஆர்வம் இருந்தது.இனக் கண்ணோட்டம் இம்மியளவும் இல்லாதிருந்த தமிழ் மக்களிடையே சாதி,மத,பகை,உயர்வு தாழ்வு என்ற உட்பூசல்களுக்கு குறைவிருந்ததாக தெரியவில்லை.எனவே இந்த இழிவு நிலையில் இருந்து தம் மக்களை மீட்டெடுக்கும் பணியில் செல்வா அவர்கள் ஈடுபட்டார்.

இன ஒற்றுமையை ஏற்படுத்திய ஏந்தல்...

சிறுபான்மை,பெரும்பான்மை என்ற வித்தியாசம் பார்காதமையினால்தான் கிறிஸ்தவனாக இருந்த ஒருவர்  சிவநெறியை பின்பற்றும் பல்லாயிர கணக்கான தமிழர்களுக்கு தலைவனாக முடிந்தது.யாழ்பாணத்தான்,வன்னியன்,திருகோணமலையான்,மட்டக்களப்பான்,மலையகத்தான் என்று தமிழன் மாநில அடிப்படையில் பிரிந்து போய்க் கிடந்த நிலையை மாற்றி ஒரு குடையின் கீழ் கொண்டு வந்த பெருமை தந்தை செல்வாவையே சேரும்.

ஓர் இனம் மாற்றானின் ஆதிக்கத்தில் இருந்து விடுபடவேண்டும் என்றால் முதலில் அந்த இனத்தினுள் வேறுபாடுகள்,கூறுபாடுகள் ஒழிக்கப்பட்டு இன ஒற்றுமை உருவாக்கப்பட வேண்டும் என்ற முதன்மையான உண்மையை செல்வா சரியாக உணர்ந்திருந்தார்.இன ஒற்றுமை பணிக்கு முன்னுரிமை கொடுத்து,அதனை செய்தும் முடித்தார்.

செல்வாவின் திறன்.. 

 • இவர் ஆற்றல்மிகு பேச்சாளராகவும்,மக்களை ஈர்க்கின்ற சொல்லாட்சிக்கு உரியவராகவும்,அலங்காரமில்லா பொருள் பொதிந்த பேச்சின் ஊற்றாகவும் திகழ்ந்தார். 
 • அவர் சொல்லும் வழியெல்லாம் செல்ல மக்கள் காத்துக்கிடந்த காலத்திலும்,அவர் தான்தோன்றித்தனமாக நடந்துகொள்ளவில்லை.மக்களின் உணர்வுகளை மதித்து,அவர்களின் கருத்துக்களை கேட்டறிந்து,அவற்றை தனது சிந்தனையில் சலித்து உகந்த வழிகளை தெரிவு செய்து செயற்பட்டார்.("மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பு கொடுக்கின்ற தலைவன்தான் சிறந்த தலைவனாக இருக்க முடியும்" என்ற இலக்கணத்துக்கு தந்தை செல்வா தகுதியுடையவரானர்)
 • முக்கியமாக மக்களை வழிநடத்துகின்ற(வழிநடத்திய)தலைவர்கள் பலர்,சொல்லுவது போல தாங்கள் நடந்துகொள்வதில்லை.அதனால்தான் பல தலைவர்களை மக்கள் ஏற்றுக்கொள்ள முன்வருவதில்லை.ஆனால் இந்த விடயத்தில் செல்வா சொல்வதுபோலவே நடந்தும் காட்டினார்.
 • எதிர்காலத் தலைமுறையின் எதிர்காலம் பற்றியே சிந்தித்தார்.அதற்கான பல திட்டங்களை வகுத்தார்.அதன் வழியிலேயே செயல்பட்டார்.அதனால்தான் அவர் அரசியல்வாதியாக குறுகிப்போகாமல்,இனத்தலைவராக உயர்ந்து நின்றார்.

பொன்னம்பலம் - பின் அம்பலம்!

ஜி.ஜி.பொன்னம்பலம்

ஆங்கில ஆட்சி அகன்றபின் இலங்கையில் சிங்கள பேரின ஆதிக்கம் தலைதூக்கி நின்றபோது தன்னுடைய ஆங்கில புலமையாலும்,சொல்லாற்றலாலும் சிங்கள ஆதிக்கத்துக்கு எதிராக குரல் கொடுத்தவர் ஜி.ஜி.பொன்னம்பலம் ஆகும்.காலப்போக்கில் சிங்கள அரசு வாரிவழங்கிய பதவி,பட்டம் என்பவற்றுக்கு சோடை போன இவர்,தனது சுயநலத்துக்காகவும் தனது வளர்ச்சிக்காவும் தமிழினத்தையே சிங்கள இனத்தவரிடம் அடகு வைக்கும் முயற்சியில் இறங்கியபோது,விழிப்புடன் வீறுகொண்டு எழுந்து,அச்சதிச் செயலை முறியடித்து தமிழினத்துக்கு தலைமையேற்றார் தந்தை செல்வா அவர்கள்.

இணைப்பாட்சித் திட்டத்தை ஏற்றல்...

ஜி.ஜி.பொன்னம்பலம்,தந்தை செல்வா..
                                                           
பொன்னம்பலத்திடமிருந்து தமிழினத்தை மீட்டவர் சிங்கள ஆதிக்கத்திலிருந்து தமிழ்மக்களை மீட்டு தமிழர்களுக்கு உரிய உரிமைகளை பெற்றுத் தர பல்வேறு வழிகளை ஆராய்ந்து நடைமுறைப்படுத்தினார்.
ஒன்றுக்கு மேற்பட்ட மொழி,இனம்,பண்பாடு என்று வேறுபட்ட அடையாளங்களைக் கொண்ட நாட்டில் ஒற்றை ஆட்சி ஒத்து வராது.அது பேரினத்தின் பிடியிலேயே இருக்கும் என்பதனால் தமிழ் மக்களின் மிளிர்ச்சிக்காக எல்லா மக்களது உரிமைகளும் மதிக்கப்படும் வகையில் ஒரு இணைப்பாட்சி முறையே நல்லது என்று அதனை அறிமுகம் செய்தார்.சிங்களமும் தமிழும் ஒத்துவாழ செல்வா அவர்கள் பலமுறை முயற்சி செய்தார்.ஆனால் இப்படிப்பட்ட முயற்சி வெற்றிபெற வேண்டும் என்றால் இரு இனத்தாரும் வெளிப்படையாக கள்ளம்,கபடம் இல்லாமல் வெள்ளை உள்ளத்தோடு ஒருவரை ஒருவர் நம்ப வேண்டும் இல்லையேல் இந்த திட்டம் பயன் தராது. என்றாலும் நல்ல நோக்கத்திற்காக செல்வா அவர்கள் தொடர்ந்து முயற்சி செய்து,அதன் விளைவாக 1965 இல் செல்வநாயகம்-பண்டார நாயகா ஒப்பந்தமும், 1970 இல் செல்வநாயகம்-சிறிமாவோ உடன்படிக்கையும் செய்து கொள்ளப்பட்டது.ஆனால் அதை எல்லாம் சிங்கள அரசியல் தூரப் போட்டுவிட்டு தனது பாணியில் தமிழ் இந்தி சீண்ட தொடங்கியது.இதன் முடிவாக "தனி ஈழமே தீர்வு என தந்தை செல்வாவை முடிவு செய்ய வைத்தது"

தமிழகம் வந்த தந்தை செல்வா...

1972 இல் தந்தை செல்வா அவர்களின் தலைமையில் ஒரு குழுவினர் தமிழகம் வந்து,தந்தை பெரியார்,மு.க.கருணாநிதி உட்பட பல தலைவர்களை சந்தித்தார்.தமிழ் மக்களுக்கு உதவுவதாக தந்தை செல்வா காலத்தில் இருந்தே மு.க.கருணாநிதி அவர்கள் சொல்லிக்கொண்டு இருக்கின்றார்.தமிழர்களுக்கு உதவிக்கரம் நீட்டுவதாக தந்தை செல்வாவிடம் உறுதி மொழி அளித்தார் கருணாநிதி இதன் காரணமாக இருவரிடையேயும் கடித பரி மாற்றங்கள் நிகழ்ந்தன,நல்ல ஒரு உறவு ஏற்பட்டது.

எம்.ஜி.ஆர்,பெரியார் உடன் தந்தை செல்வா 
                                                             
1976 இல் ஆறு அம்சக் கோரிக்கைகளை வைத்தார் தந்தை செல்வா அவர்கள்.இதனையும் வழமை போலவே சிங்கள அரசியல் அலட்சியம் செய்தது.இதனால் கோபமடைந்த செல்வா அவர்கள் யாழ்பாணத்தில் வட்டுக்கோட்டையில் "எம் இழந்த இறைமையை,எம் இழந்த விடுதலையை மீண்டும் நிலைநாட்டினால் அன்றி,எமக்கு வாழ்வு இல்லை"என்று திட்ட வட்டமாக கூறினார்.(ஆங்கிலேயனின் ஓட்டத்துக்கு பின் எமது வாக்குரிமை,குடியுரிமை,நிலவுரிமை,மொழியுரிமை,கொடியுரிமை,தொழில் உரிமை,கல்வி உரிமை,மத உரிமை என்று எல்லா உரிமைகளும் ஆட்டம் கண்டன,ஆட்டம் காண வைத்தார்கள் என்றே சொல்ல வேண்டும்)இரு இனம் இனி கூடி வாழ முடியாது அவ்வாறு நடந்தால் அது தமிழ் மொழியின் தற்கொலைக்கு சமன் என்ற முடிவிற்கு தந்தை செல்வா வந்தார்.

இறுதிவரை தமிழையும்,தமிழனையும் யார்க்காவும் யாரிடமும் அடகு வைக்காத ஒரு உன்னத தலைவனாக இருந்தார்.

எந்த இனத்திற்கும் சொந்த தாயகம் வேண்டும்....

"ஓர் இனமானது,தன் மொழி,உரிமை உட்பட பலவற்றை இழந்தாலும் அதை மீண்டும் பெறுவதற்கு சந்தர்ப்பங்கள் உண்டு.பெற்றுவிடலாம்.ஆனால் ஓர் இனம் தன் தாயகத்தை,தன் வாழ்வகத்தை,தன் பரம்பரைப் பகுதியை இழந்தால்,பறி கொடுத்தால் அந்த இனத்திற்கு எதிர்காலமே இல்லை!" இதனை வலுவாக நம்பினார் தந்தை செல்வா அவர்கள்.இவரது முழக்கம் எதிர்கால தமிழ் சமுதாயத்தின் விழிப்பிற்கும்,வீறு நடையிட்கும் காரணமாகும்.

1977 ஆம் ஆண்டு உடல் நலிவுற்ற நிலையில் இருந்த பொது தெல்லிப்பளை-யாழ்ப்பான இல்லத்தில் நடக்கும்போது இடறி விழுந்துவிட்டார்.தலையில் பலத்த காயம் காரணமாக நினைவிழந்த தந்தை செல்வா அவர்கள் யாழ்பாணம் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.இனத்துக்காக போராடும் இணையற்ற தலைவன் உயிருக்கு போராடும் நிலை அறிந்த மு.க.கருணாநிதி தந்தை செல்வாவை எப்படியாவது காப்பாற்ற வேண்டும் என்பதற்க்காக தமிழகத்தின் தலைசிறந்த நரம்பியல் வல்லுநர்களை யாழ்ப்பாணம் அனுப்பி சிகிச்சை அளிக்க உதவி செய்தார்.கருணாநிதி அவரின் முயற்சிகள் வீண்போய் 1977ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 26 ஆம் நாள் தந்தை செல்வா அவர்கள் நம்மை விட்டு நீங்கினார்.(உயிர் மட்டும்தான் அவரை விட்டு பிரிந்தது ஆனால் இன்னமும் தந்தை செல்வா அவர்கள் உண்மையான தமிழ் மகன் ஒவ்வொருவரின் மனதிலும் வாழ்ந்துகொண்டுதான் இருக்கின்றார்) 

"தமிழ் ஈழம் முடிந்த முடிவு"என்றார் தந்தை செல்வா.அமைதி வழிநாட்டிய அவராலே அந்த முடிவுதான் இறுதி முடிவாக கொள்ளப்பட்டது என்றால் அதை தவிர்க்க முடிவேது?தமிழ் மக்களுக்கு விடிவேது?

[நம் மக்களிடையே இன்னமும் சாதி,மத வேறுபாடுகள் குறைந்ததாக இல்லை,நம்மக்கள் தான் நன்றாக இருக்க வேண்டும் என்று நினைக்கின்றானே தவிர நாங்கள் நன்றாக இருக்கவேண்டும் என்று நினைக்கவில்லையே..?நம்மிடையே உள்ள வேறுபாடுகளை நான் கூறு போடாவிட்டால் இன்னமும் அனுபவிக்க வேண்டி இருக்கும்,தமிழர் நம் மொழி பழையது,நம் சமூகம் பெரியது ஆனால் என்ன ஒற்றுமை மட்டும் நம்மிடையே என்றும் இருந்தபாடில்லை..]


வாழ்க தந்தை செல்வாவின் புகழ்!

Post Comment

8 comments:

 1. nice work
  keep going :)

  ReplyDelete
 2. superb machchan unathu pajanam thodara enathu vaalththukkal da

  ReplyDelete
  Replies
  1. oooo vaalththukkalukku nantri..nanba raam...

   Delete
 3. கலக்கியிருக்கிறீங்க!!! பலபேருக்கு இந்த விடயங்கள் போய் சேரணும்!!! முடியுமான இடங்களில் ஷேர் பண்ணுங்க!!

  ReplyDelete
  Replies
  1. நிட்சயமாக அண்ணா...நம் பெருமையை நாமே சொல்லிக்கொள்ள வேண்டிய நிலைமை..என்ன செய்வது..?

   Delete
 4. wowwwww........... kohhulan asaththidday... niraya vidayangalai intha post uudaaka ariyakkuudiyaakiddu.... vaalththukkal nanbaa...........  //// பொன்னம்பலத்திடமிருந்து தமிழினத்தை மீட்டவர் சிங்கள ஆதிக்கத்திலிருந்து தமிழ்மக்களை மீட்டு தமிழர்களுக்கு உரிய உரிமைகளை பெற்றுத் தர பல்வேறு வழிகளை ஆராய்ந்து நடைமுறைப்படுத்தினார்.///////............... ithu tamil people nirayapperukku theriyaatha vidayam.. bcz, inrum niraya tamil aakkal GG.Ponnambalathai periyaa aalaakave mathikkiraakal.....

  ReplyDelete
  Replies
  1. நன்றி அண்ணா...நிட்சயமாக ஜி.ஜி.பொன்னம்பலத்தின் அம்பலங்களை வரும் பத்திப்புக்களில் நிட்சயமாக பதிப்பேன்...

   Delete